பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்பாக 97 மாணவர்களைக் கைது செய்த துருக்கிய காவல்துறை

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் போகாசிகி பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற இஸ்லாமிய போதகர் மாநாட்டுக்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதன்தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 97 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இஸ்லாமிய போதகர் நுரெடின் யில்டிஸ் என்பவரின் மாநாட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போதகர், இளம் வயது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவர்.
வளாகத்தில் காவல்துறையின் தடுப்புகளை உடைக்க முயற்சி செய்த மொத்தம் 97 மாணவர்கள் தடுத்துவைக்கப்பட்டனர் என்று ஆளுநர் தாவுத் குல் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.
மாணவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பில் 13 காவல்படை அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும் அவர் சொன்னார்.
அதிபர் தயிப் எர்துகனின் அரசியல் எதிரியான இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து துருக்கியில் அண்மைய மாதங்களாக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.