பேஸ்புக்கில் ஜனாதிபதியை அவமதித்த துனிசிய நாட்டவருக்கு மரண தண்டனை
துனிசிய நாட்டு ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதித்து, அரசின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதற்காக துனிசிய நீதிமன்றம் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
51 வயதான துனிசிய நாட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசை கவிழ்க்க முயன்றது, ஜனாதிபதியை அவமதித்தது மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்த வார தொடக்கத்தில் சபர் சௌசென் என்பவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதற்கமைய, துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சைபர் கிரைம் சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிபதிகள், அவரது பதிவுகள் வன்முறை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகத் தீர்மானித்துள்ளனர்.
சமூக ஊடக நடவடிக்கைகளுக்காக துனிசியாவில் இதுபோன்ற தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
துனிசியாவில் மரண தண்டனை சட்டப்பூர்வமானது என்றாலும், 1991 ஆம் ஆண்டு ஒரு கொலை குற்றச்சாட்டிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





