பிரிட்டனின் தொழிலாளர் கட்சி அமெரிக்க தேர்தலில் தலையிடுவதாக டிரம்ப் குழுவினர் குற்றச்சாட்டு
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிசுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதாக டிரம்ப் குழுவினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.குறிப்பாக பிரிட்டனின் தொழிலாளர் கட்சி தேர்தலில் அப்பட்டமாக தலையிடுவதாக அக்குழு அமெரிக்க தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தொழிலாளர் கட்சிக்கும் கமலா ஹாரிஸின் பிரசாரக் குழுவுக்கும் இடையே சந்திப்பு நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊடகங்களில் வெளியான செய்திகள் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தலில் தொழிலாளர் கட்சியினர் நேரடியாக ஈடுபடுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் தொழிலாளர் கட்சிக்கு எதிராக டிரம்ப் குழுவினர் புகார் கூறுவது அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகாது என்று அமெரிக்க அரசியல் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் நடவடிக்கை பிரிவின் தலைவரான சோஃபியா படேல் லிங்க்டினில் தற்போதைய, முன்னாள் உறுப்பினர்கள் 100 பேர் அமெரிக்காவுக்குச் செல்லவிருப்பதாக தெரிவித்திருப்பதாகவும் டிரம்ப் குழுவினர் புகார் கூறியுள்ளனர்.
அந்தப் பதிவில், பத்து இடங்கள் இன்னமும் காலியாக இருக்கிறது, யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே பெண் அதிபருக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக கமலா ஹாரிஸ் என்பிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“சந்தேகமே இல்லை, அமெரிக்கா பெண் அதிபருக்குத் தயாராகி வருகிறது, வேட்பாளர்கள் தங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதில் அமெரிக்கர்கள் அக்கறையாக இருக்கின்றனர்,” என்று அவர் கூறியுள்ளார்.