அமுலுக்கு வந்த டிரம்பின் வரிகள் – அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதி ஏப்ரலில் 21% சரிவு

சீனப் பொருள்கள்மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 145% வரிகளை விதித்த ஒரு மாதத்தில் அமெரிக்காவுக்கு சீன ஏற்றுமதிகள் சரிந்தாலும், பொதுவாக அவை முன்னுரைக்கப்பட்டதைவிட அதிகரித்தன.
ஏப்ரலில் மொத்த ஏற்றுமதிகள் 8.1% கூடின. பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்த 2% உயர்வைவிட இது அதிகம். சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு டிரம்ப் 90 நாள்களுக்கு வரியை நிறுத்தி வைத்துள்ள நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடையே தேவை அதிகரித்திருப்பது இதற்குக் காரணம்.
ஏப்ரல் தொடக்கத்தில் வரி உயர்வு நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு சீன ஏற்றுமதிகள் 21% குறைந்தன. ஒப்புநோக்க, ஆசியான் நாடுகளுக்கு சீன ஏற்றுமதிகள் 21% ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 8% கூடின.
அமெரிக்கப் பொருள்கள்மீதும் சீனாவின் வரிவிதிப்பால் அங்கு அமெரிக்க ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 14% குறைந்தன.
சீனாவிலும் அமெரிக்காவிலும் வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் தொழில் நிறுவனங்களின் எதிர்காலம், இந்த வாரயிறுதியில் சீனா-அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளைச் சார்ந்துள்ளது. இதில் வரிகள் குறைக்கப்பட்டு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜூலை காலக்கெடுவைப் பூர்த்திசெய்ய ஆசியான் நாடுகள் தங்களது உற்பத்தியை வேகப்படுத்துகின்றன. அவற்றின் தயாரிப்புகள், மூலப்பொருள்களையும் தொழிற்சாலை உற்பத்திகளையும் பெரிதும் சார்ந்துள்ளன. எனவே, சீனாவின் ஏற்றுமதிகளுக்கு ஆதரவு உள்ளது,” என்று யூரேஷியா குரூப்பின் சீன இயக்குநர் டான் வாங் கருத்துரைத்தார்.
அமெரிக்கா உடனான சீனாவின் வரத்தக உபரி, மார்ச்சில் US$27.6 பில்லியனிலிருந்து ஏப்ரலில் US$20.5 பில்லியனாக (S$26 பி.) குறைந்தது. இந்த இடைவெளியைக் குறைக்க விரும்புவதாக பலமுறை கூறிய திரு டிரம்ப்புக்கு இது நற்செய்தி.
வரிகள் குறைக்கப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை என்றால், சீனப் பொருளியலுக்கு அவை பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
“அமெரிக்க வரிவிதிப்பின் முழுத் தாக்கம், ஏப்ரலுக்கான வர்த்தகத் தரவில் வெளிப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் வர்த்தகத் தரவு படிப்படியாகப் பலவீனமடையும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்று பின்பாயிண்ட் அசெட் மேனேஜ்மண்ட்டில் தலைமைப் பொருளியல் நிபுணரான ஸாங் ஸிவெய் கருத்துரைத்தார்.