மத்திய கிழக்கு

ட்ரம்பின் காசா திட்டம் குறித்து இஸ்ரேல் , ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை

ட்ரம்பின் அமைதி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரேல், ஹமாஸ் உயரதிகாரிகள் எகிப்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை பரிந்துரைத்தார். கடந்த 30ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஹமாஸ் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதிக்க மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை அடுத்து காசாவில் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். மேலும் ட்ரம்பின் அமைதி திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

நெதன்யாகுவின் நடவடிக்கையை வரவேற்று, சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும் நன்றி. நல்ல செய்திக்காக காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அனைத்து பணய கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்காக ட்ரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) நடைபெற உள்ள இப் பேச்சுவார்த்தையில் 20 அம்ச திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளனர்.

இதில் இஸ்ரேல் தரப்பில் மூலோபாய அமைச்சர் ரான் டோமர், கைதிகள் பரிமாற்ற விவகார அமைச்சர் கால் ஹிர்ஸ்ச் மற்றும் மொசட் உயரதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். ஹமாஸ் தரப்பில் முக்கிய தளபதிகள் கலந்துகொள்ள உள்ளனர். மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப், டிரம்பின் மருமகனும் அவரின் தனி ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.