மீண்டும் வரி விதிக்க முடிவு – இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப்!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொஸ்கோவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதை கட்டுப்படுத்த தவிர்க்கும்பட்சத்தில், இந்தியா மீது மேலும் பொருளாதார வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவிற்கு தண்டனை விதிக்கும் வகையில் வரி விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் எரிசக்தி விநியோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய ட்ரம்ப், வொஷிங்டனின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகும் முயற்சியாக இதனை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். என்னை மகிழ்ச்சியடையச் செய்வது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்தியா தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா எரிசக்தி இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





