மூடிய கதவுகளுக்கு பின்னால் கையெழுத்திட்ட ட்ரம்ப் : அருங்காட்சியங்களுக்கு பறந்த உத்தரவு!

அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களில் இருந்து “பிளவுபடுத்தும்” மற்றும் “அமெரிக்க எதிர்ப்பு” உள்ளடக்கங்களை நீக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூட்டாட்சி நிறுவனங்கள் மற்றும் ஸ்மித்சோனியனை வழிநடத்தும் ஒரு நிர்வாக உத்தரவில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் உண்மை மற்றும் நல்லறிவை மீட்டமைத்தல்” என்று அழைக்கப்படும் இந்த உத்தரவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் முறையற்ற முறையில் அகற்றப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நினைவு சின்னங்களை மீட்டெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில், வரலாற்றை மீண்டும் எழுதுவது அமெரிக்க மைல்கற்களை “எதிர்மறை வெளிச்சத்தில்” காட்டியுள்ளதாகவும், எனவே இனம் மற்றும் பாலினம் தொடர்பான சில வரலாற்று சூழலை அகற்ற அருங்காட்சியகங்களுக்கு அறிவுறுத்துவதாகவும் நிர்வாக உத்தரவின் முழு உரையில் வெள்ளை மாளிகை கூறியது.
அத்துடன் அமெரிக்க மதிப்புகளை இழிவுபடுத்தும், அமெரிக்கர்களை இனத்தின் அடிப்படையில் பிரிக்கும், அல்லது கூட்டாட்சி சட்டத்திற்கு முரணான திட்டங்கள் அல்லது சித்தாந்தங்களை ஊக்குவிக்கும்” கண்காட்சிகள் அல்லது திட்டங்களுக்கு அமைப்பின் எதிர்கால நிதி தடை செய்யப்படும் என்றும் அது மேலும் கூறியது.