நாடு கடத்துவதில் தீவிர ஆர்வம் காட்டும் டிரம்ப் – தயாராகும் புதிய சட்டமூலம்

அமெரிக்காவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பல ஆண்டுக்கு முன் வழக்கு பதியப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படையில், நாடு கடத்தும் வகையில், புதிய சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில், புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது சட்டமானால், ஒரு நபர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை ஆண்டுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் மது அருந்தியதை ஒத்துக் கொண்டிருந்தாலும், அதனடிப்படையில் அவரை நாடு கடத்த முடியும்.
இது, கிரீன் கார்டு எனப்படும் குடியிருப்பதற்கான நிரந்தர உரிமை பெற்றவர்கள் மற்றும் கல்வி, தொழில் என பல்வேறு விசா வைத்திருப்பவர்களை நாடு கடத்துவதற்கும், அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வர அனுமதிப்பதை தடுக்கவும் வழிவகுக்கிறது.
கடந்த, 2018 முதல் 2023 வரை 43,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்த சட்டமூலம் புலம் பெயர்ந்தவர்களையும், படிப்பு, வேலை தேடி சென்றிருப்பவர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களே கல்வி கற்க சென்றுள்ளனர். இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்டு பெறும் தனிநபர்களில் இந்தியர்களே மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர்.
எந்தவித விசாரணை, எச்சரிக்கை, வாய்ப்பு இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுத்து நாடு கடத்துவதற்கான சட்டத்தை கொண்டு வரும் அமெரிக்க அரசின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.