அமெரிக்காவில் கார் விலைகள் அதிகரிக்கும் அபாயம் – எனக்கு கவலையில்லை என கூறிய டிரம்ப்

அமெரிக்காவில் வாகன உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியால் கார் விலைகளை உயர்த்தினால் அது பற்றி தனக்கு கவலையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விலை உயர்ந்தால் வாகன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் விலைகள் உயர்வது அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை டிரம்ப் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் கார்கள், இலகு ரக லாரிகளுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். அது ஏப்ரல் 3 முதல் நடப்புக்கு வரும்.
மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுடன் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தால் அங்கிருந்து வரும் கார் பாகங்களுக்கான தீர்வைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அமெரிக்கக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும், கார் வரத்தகத் துறையைக் காப்பாற்றவும் டிரம்ப் இறக்குமதித் தீர்வையை நிரந்தரமாக்க விரும்புகிறார்.
இதற்கிடையில் முக்கிய அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் பங்கு விலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் விலை உயர்வு அமெரிக்கப் பயனீட்டாளர்களைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.