சுவிட்சர்லாந்தில் வெடிக்கப்போகும் கிரீன்லாந்து சர்ச்சை- ஐரோப்பாவுக்கு ட்ரம்ப் அழுத்தம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos) இந்த வாரம் நடைபெறும் மன்றத்தில் ஐரோப்பிய தலைவர்களிடம் கிரீன்லாந்து எமக்குக் கட்டாயம் என்று கூறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(Ursula von der Leyen ), ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐரோப்பாவின் பதில் அசைவற்றதாகவும், ஒன்றுபட்டதாகவும், இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “நீங்கள் கிரீன்லாந்தில் என்ன செய்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று மக்ரோன் குறிப்பிட்டிருந்தார்.
நேட்டோவின் பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துகளையும் ட்ரம்ப் பகிர்ந்துள்ளதுடன், கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டுள்ள படங்களையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
மேலும், கிரீன்லாந்து தொடர்பாக உடன்பாடு எட்டப்படாவிட்டால், பிரித்தானியா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு பெப்ரவரி
முதலாம் திகதி முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





