வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உட்பட 7 கூட்டாட்சி நிறுவனங்களை கலைக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) ஏழு அரசாங்க அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான படிவங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
கலைக்கப்படும் அமைப்புகளில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா போன்ற அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஆதரவால் உலகம் முழுவதும் செயல்படும் ஊடகங்களும் உள்ளன.
தொழிலாளிகளால் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிக்கவும் சமரசம் பேசவும் உள்ள அமைப்பு, அருங்காட்சியகம் மற்றும் நூலக சேவைகளுக்கான அமைப்பு, உட்ரோ வில்சன் அனைத்துலக பேராளர்கள் நிலையம் ஆகியவையும் கலைக்கப்படுகின்றன.
பலரையும் முகம் சுழிக்க வைக்கும் விதமாக வீடற்றவர்களுக்கு உதவும் மன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டுள்ளார். போதிய நிதி ஆதரவு இல்லாமல் தடுமாறும் சமூகத்திற்கு இந்த மன்றம் உதவிகளை வழங்கி வருகிறது.மேலும் சிறுபான்மை சமூகத்தினரின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் சிறுபான்மையினர் தொழில் வளர்ச்சி அமைப்பும் கலைக்கப்படுகிறது.
இன்னும் ஏழு நாள்களுக்கு இந்த அமைப்புகளின் தலைவர்கள் மேலாண்மை மற்றும் வரவு செலவு அலுவலகத்தின் இயக்குநரைச் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து அவருக்குத் துணையாகப் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
மஸ்க்கின் தலைமையில் டோஜ் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது தேவையில்லாத அரசாங்க அமைப்புகளை அகற்றவும் அரசாங்க ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.மஸ்க்கின் இந்த நடவடிக்கை பல பிரச்சனைகளை உண்டாக்கும் என்று பலர் குறைகூறி வருகின்றனர்.