டிரம்ப் செனட்டர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க வாய்ப்பு
அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோவைத் தமது வெளியுறவு செயலாளராக டோனல்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நவம்பர் 11ஆம் திகதி தகவல் அறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.
இதன்வழி, டிரம்ப் ஜனவரியில் அதிகாரபூர்வமாகப் பதவியேற்றபின், ஃபுளோரிடாவில் பிறந்த ஓர் அரசியல்வாதி அமெரிக்காவின் ஆக உயர்மட்ட அரசதந்திரியாகும் முதல் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பார்.
வெளியுறவு அமைச்சர்க்கான டிரம்ப்பின் பட்டியலில், மிகக் கடுமையாகக் குரல்கொடுக்கக்கூடியவர் செனட்டர் ரூபியோ என்று கூறப்படுகிறது.
சீனா, ஈரான், கியூபா உட்பட அமெரிக்காவின் புவிசார் எதிராளிகள் தொடர்பில் வலுவானதொரு வெளியுறவுக் கொள்கைக்காகப் பல ஆண்டுகளாக ரூபியோ ஆதரித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, டிரம்ப்பின் கருத்துகளோடு மேலும் நன்கு ஒத்துப்போக, கடந்த பல ஆண்டுகளாக ரூபியோ தமது நிலைப்பாடுகளைச் சற்று மிதமாக்கிக் கொண்டார்.
அதிக செலவுமிக்க, பயனற்ற போர்களை நோக்கி அமெரிக்காவைக் கொண்டு சென்றதாக, இதுவரை பதவி வகித்த அதிபர்களை டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், கூடுதலாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும் என்று அவர் அழுத்தம் தந்து வருகிறார்.
இறுதி நிமிடத்தில் டிரம்ப் தமது மனதை மாற்றக்கூடும் என்ற நிலை இருந்தாலும், நவம்பர் 11ஆம் திகதி நிலவரப்படி டிரம்ப் தமது தேர்வில் உறுதியாக உள்ளார் என்று தகவலறிந்தோர் கூறியுள்ளனர்.