நெருக்கடியில் சிக்கிய ட்ரம்ப் – 37 குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக தகவல்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீது ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பில் அவர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அணுவாயுத ரகசியங்கள், ராணுவ விமானங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் ட்ரம்ப் தவறாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
ட்ரம்பின் வழக்கறிஞர்கள் இருவர் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மயாமியில் (Miami) நீதிமன்ற விசாரணைக்குச் செல்லக்கூடும்.
தவறு ஏதும் செய்யவில்லை என்று ட்ரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்ததை மறைத்து வணிக ஆவணங்களில் பொய்க் கணக்குக் காட்டியதாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் முயல்கிறார்.
குற்றவியல் விசாரணை அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முயல்வதைக் கட்டுப்படுத்தாது என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.