சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம் – ஈரான் விடுத்த மிரட்டல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் சூரிய குளியல் செய்யும் போது டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படுவது எளிது என ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய கருத்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் அமெரிக்காவின் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போரின்போது, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஏற்க முடியாத விஷயமாக உள்ளது.
இதனால், டிரம்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையாக மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
ஈரான் ஆட்சியாளர் அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகரான ஜாவத் லரிஜானி, ஒரு தொலைக்காட்சி பேட்டியில், “புளோரிடாவில் உள்ள டிரம்பின் வீட்டில் அவர் சூரிய குளியல் செய்ய முடியாது. ஏனெனில், அவர் மீது டிரோன் தாக்குதல் நடத்துவது மிக எளிது,” என்று கூறினார்.
இந்தக் கருத்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஈரான் தளபதி காசிம் சுலைமாணியை டிரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், ஈரான் தரப்பில் சுமார் 225 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், இது கமேனிக்கு மற்றும் மதத்திற்கு எதிரானவர்களை அழிக்க பயன்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஈரான் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்கள் நிதியுதவி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மிரட்டல் குறித்து டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, அவர், “இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன், எனக்கு அதில் ஆர்வமில்லை,” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.