பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அமெரிக்காவை தொடர்பு கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் தொடர்பாக இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில், ஈரானிய தலைவர்கள் “பேச்சுவார்த்தை நடத்த” அமெரிக்காவை தொடர்பு கொண்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாத இறுதியிலிருந்து ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தெஹ்ரானில் உள்ள பிணவறையொன்றில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து, சுமார் 180 சடலங்கள் இருப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.
இதனிடையே போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தினால், “நாங்களும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குவோம்” என கடந்த வாரம் ட்ரம்ப், எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பான HRANA, இதுவரைசுமார் 500 போராட்டக்காரர்களின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை முதல் ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் தகவல்களை வெளியுலகிற்கு கொண்டு வருவது கடினமாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி, நாட்டில் அமைதி நிலவுவதாக காட்ட முயற்சிப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.





