திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!
 
																																		திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (10.01) ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான குறித்த வைத்தியசாலை 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மத்திய அரசாங்கத்திற்கு கீழ் உள்வாங்கப்பட்டதாகவும், அன்று தொடக்கம் இன்று வரை புதிய சிற்றூழியர்களை நியமிக்கப்படவில்லை எனவும் புதிய ஊழியர்களை நியமிக்குமாறும் கோரி இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் ஓய்வூதியம் பெற்று சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 333 சிற்றூழியர்கள் தேவைப்படுகின்ற பட்சத்தில் 206 பேர் கடமையில் தற்பொழுது இருப்பதாகவும் இதனால் விடுமுறை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

 
        



 
                         
                            
