திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!
திருகோணமலை-பிரதான கடற்கரையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு பௌத்த பிக்குகளான திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் உட்பட 04 சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக துறைமுக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரில் 9 பேர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.
கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.





