திருச்சி – முன்பகையால் பறிபோன முதியவரின் உயிர் ; மூவர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருவெள்ளறை. இப்பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (77). இவருக்கு கோமதி என்ற மகளும், மூன்று பேரன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சரசு (55). இவருடைய மகள் மாலதி (40). இவருக்கு 16 வயது மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடாச்சலம் குடும்பத்தினருக்கும் சரசு குடும்பத்தினருக்கும் இடையே இடம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி இரவு சரசு பேரனான 16 வயது சிறுவன் கல்லை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட வெங்கடாசலம் தனது பேரன்கள் மீது கல் பட்டு விடும் என சரசு பேரனை கண்டித்துள்ளார். இது குறித்து அந்த சிறுவன் தனது தாய், பாட்டி ஆகியோரிடம் கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வெங்கடாசலத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் பொலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வழக்கு வேண்டாம், சமாதானமாக செல்வதாக கூறியுள்னர். இருப்பனும் சரசு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்த வெங்கடாசலம் அன்று இரவு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கோமதி அளித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து 16 வயது சிறுவன், மாலதி, சரசு ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சரசு, மாலதியை திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். சிறுவனை திருச்சியில் உள்ள காப்பகத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.