தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ மற்றும் இமதுவக்கு இடையில் 102 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மண்சரிவில், நெடுஞ்சாலை பாதுகாப்பிற்காக கடமையாற்றிய நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியின் இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வீதியின் இருமருங்கிலும் உள்ள மலைப்பகுதியின் மேல் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வீதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 102வது கிலோமீற்றர் பகுதியின் பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய நான்கு பாதைகளும் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மக்களுக்கு அறிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, கொட்டாவயிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேறி காலி, தெனியாய மாதம்பே வழியாக இமதுவ நுழைவாயிலில் மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய வேண்டும்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொட்டாவ நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் இமதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேறி காலி தெனியாய – மாதம்பே வீதியூடாக பயணித்து பின்னதுவ நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைய வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.