நுவரெலியாவில் குவியும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக, அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது.
தற்போது நுவரெலியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் உறைபனிப் பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளைகளில் பனிமூட்டமும் என ஒரு மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. இந்த இதமான சூழலை அனுபவிப்பதற்காக இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை முதல் நுவரெலியா நகருக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் நகரின் முக்கிய இடங்கள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளன.
குறிப்பாக,
விக்டோரியா தாவரவியல் பூங்கா
பழமைவாய்ந்த பிரதான தபால் அலுவலகம்
கிரகரி வாவிப் பகுதி
ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக நுவரெலியா – பதுளை பிரதான வீதியோரம் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையங்களில் காலை முதலே பயணிகள் திரண்டு தங்களது விடுமுறையை கழித்து வருகின்றனர்.





