Lockport குகைக்குள் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து
அமெரிக்காவின் Lockport குகையில் சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கிய நிலையில், ஒருவர் மரணமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில் பலர் காயங்களுடன் தப்பியதை அடுத்து, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பகல் 11.25 மணிக்கு Lockport குகையில் விபத்து நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதில் 60 வயதான நபர் மரணமடைந்துள்ளதாகவும், அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு கவிழ்ந்ததில், அந்த நபர் அடியில் சிக்கியிருக்கலாம் எனவும், அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
அந்த நபரின் மனைவியும் சம்பவத்தின் போது அந்த படகில் பயணித்துள்ளார். 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து தொடர்பில் தகவல் அறிந்து சென்றவர்கள் 16 சுற்றுலா பயணிகளை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
மொத்தம் 28 பயணிகள் அந்த படகில் இருந்துள்ளனர். மட்டுமின்றி, விபத்தின் போது ஒருவர் கூட லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
விபத்தின் காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Lockport குகையில் 1977ல் இருந்தே சுற்றுலா அனுமதிக்கப்பட்டு வருகிறது. 4 முதல் 6 அடி ஆழம் மட்டுமே அந்த குகையில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.