இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த 10 தொழில்நுட்பங்கள்
2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக பல டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், AI போன்றவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன. எனவே இப்பதிவு வாயிலாக இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டாப் 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பற்றி ஆராயலாம்.
10. Multicloud
2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பல புதுமைகளைக் கண்டுள்ளது. குறிப்பாக மல்டிகிளவுட் என்ற முறை பல சவால்களை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது எனலாம். Cloud தொழில்நுட்பம் என்பது எவ்விதமான ஹார்டுவேர் சாதனமும் இன்றி இணையத்தில் தரவுகளை சேமிக்கும் முறையாகும். இதன் அடுத்த கட்டம்தான் மல்டி கிளவுட். அதாவது ஒரு தளம் வழியாக எல்லா கிளவுட் நிறுவனங்களையும் நம்மால் பயன்படுத்த முடியும். இது பயனர்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
9. Advanced Robotics
தொழில்துறையில் ஆட்டோமேஷன் முதல் தனிப்பட்ட ரோபோக்கள் வரை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பன்மடங்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் இரண்டு கால் ரோபோவான Digit-ஐ சோதனை செய்யத் தொடங்கியது. இந்த சாதனம் அமேசான் நிறுவனத்தில் காலி டப்பாக்களை இடமாற்றுவதற்கு பயன்படும் என அறிவித்திருந்த நிலையில், பல நிறுவனங்களும் வேலை ஆட்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மூலமாக இந்த ஆண்டு ரோபோடிக்ஸ் துறை பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.
8. Web3 & Blockchain
பிளாக் செயின் என்றாலே அது கிரிப்டோ கரன்சிகளுக்கானது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கும் அப்பால் இந்தத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக முதலீடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு புதிய வழிமுறைகளை இது வழங்கியுள்ளது. இதன் மூலமாக ஒரு பாதுகாப்பான வணிக நடைமுறை அறிமுகமாகியுள்ளது எனலாம்.
7. Hyper Automation
2020 ஆம் ஆண்டில் கார்ட்னர் என்பவரால் இந்த சொல் உருவாக்கப்பட்டது. நிறுவனங்கள் முடிந்தவரை வணிகம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு தானியங்கி முறையை பயன்படுத்துவதே இந்தத் தொழில்நுட்பம். ஹைபர் ஆட்டோமேஷன் மூலமாக பல செயல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆட்டோமேஷன் செய்யும் திறனை அதிகரித்துள்ளது.
6. Quantum Computing
முன்பு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு குவாண்டம் கம்ப்யூட்டிங் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. குறிப்பாக Heron என்ற குவாண்டம் கம்ப்யூட்டிங் செயலியை IBM நிறுவனம் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அந்நிறுவனத்தின் செயல்திறன் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த செயலியின் குறைந்த பிழை விகிதம் இந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது எனலாம்.
5. 5G
5ஜி நெட்வொர்க்குகளின் கட்டமைப்பு 2023ல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்களுக்கு அதிகப்படியான இணைய வேகம் மற்றும் இணைய இணைப்பை வழங்க முடிகிறது. மேலும் 6ஜி பற்றிய ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளது. இது வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
4. Green Technologies
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிற தொழில்நுட்பங்களுக்கு அதிக ஆற்றல் நிறைந்த தரவு மையங்கள் தேவைப்படுகிறது. எனவே 2023ல் பூஜ்ஜிய ஆற்றல் தரவு மையங்களை இலக்காகக் கொண்டு பல தொழில்நுட்பங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெப்பத்தை வெளியேற்ற, திரவ குளிரூட்டியின் உள்ளேயே இயங்கும் சாதனங்கள் சிறந்த கண்டுபிடிப்புகளாகும்.
3. Zero Trust
ஜீரோ டிரஸ்ட் என்ற செக்யூரிட்டி அம்சம் இந்த தொழில்நுட்ப உலகில் ஒருபோதும் யாரையும் நம்பக்கூடாது என்ற மனநிலையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த செக்யூரிட்டி அம்சத்தை உலக அளவில் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டன என சொல்லப்படுகிறது. இதன் மூலமாக சைபர் செக்யூரிட்டி அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது.
2. AR & VR
2023ல் AR மற்றும் VR தொழில்நுட்பங்கள் இயற்பியல் மற்றும் டிஜிட்டல் உலகிற்கு இடையேயான கோடுகளை இணைப்பது போல் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளாகும். இது மக்களுக்கு தொடர்பு கொள்ளுதல் மற்றும் கற்றலுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கிறார்கள். இனிவரும் காலங்களில் இதன் வர்த்தகம் பல நூறு பில்லியன் டாலர்களை எட்டும் என ப்ளூம்பெர்க் அறிக்கை சொல்கிறது.
1. Generative AI
2023ன் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பை பற்றி நாம் பேசும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி மொழி மாதிரிகள், டீப் லேர்னிங் மற்றும் Generative AI போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் AI தொழில்நுட்பம் தொடர்ந்து அதிநவீனமாக மாறி வருகிறது. குறிப்பாக OpenAI நிறுவனத்தின் GPT-4 மனிதனைப் போல ஒரு தொழில்நுட்பத்தால் உரையாட முடியும் என்பதன் திறமையை காட்டியுள்ளது. அதேபோல DALL-E 3 போன்ற கருவியால் நமது கற்பனைக்கு ஏற்ற எதார்த்தமான படங்களை உருவாக்க முடியும்.