திபெத் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு
திபெத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறைந்தது 126 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 188 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசுக்குச் சொந்தமான சிசிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டது.
நிலநடுக்கம் காரணமாக நேப்பாளத்திலோ வேறு இடத்திலோ யாரும் மரணமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இமாலய மலைப்பகுதிகளின் மலையடிவாரத்தில் 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகச் சீன அதிகாரிகள் கூறினர்.30,000க்கும் மேற்பட்டோர் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவானது.
நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலையிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் திபெத்தின் திங்ரி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் காரணமாக நேப்பாளம் , பூட்டான், இந்தியா ஆகிய நாடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவிப்போரைத் தேடி மீட்கும் பணி தொடர்வதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்புப் பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 106 ஆம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நிலநடுக்கம் காரணமாக ஏறத்தாழ 3,609 வீடுகள் தரைமட்டமானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனால் கிட்டத்தட்ட 800,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் கூறியது.வீடுகளை இழந்த சோகம் போதாதென்று பாதிக்கப்பட்டோரைக் கடுங்குளிரும் வாட்டி வதைக்கிறது.