இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கை தமிழர்கள்!
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேரை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
இசைவேந்தன், யோகராசா, சுஜீவன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் இலங்கையை வந்தடைந்த நிலையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்னை மண்ணடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் இந்தியாவில் தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அவர்களை நாடுகடத்தியுள்ளது.
மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வல்வெட்டித்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சம்பவத்தில் இந்த மூன்று சந்தேக நபர்களும் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





