மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு தாய்லாந்தில் மூவர் சுட்டுக்கொலை

பூசல்கள் அதிகம் இருந்துவரும் தெற்கு தாய்லாந்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் மூவரைச் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் சனிக்கிழமை (மே 3) தெரிவித்தனர்.சந்தேக நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
நராத்திவாட் மாநிலத்தில் உள்ள தாக் பாய் மாவட்டத்தில் தாக்குதல்காரர் வெள்ளிக்கிழமை (மே 2) பின்னிரவில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளால் பல ஆண்டுகாலப் பூசலால் பாதிக்கப்பட்டிருக்கும் தெற்கு தாய்லாந்தில் உள்ள மூன்று முஸ்லிம் பெரும்பான்மை மாநிலங்களில் நராத்திவாட் மாநிலமும் ஒன்று.
தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரில் ஒன்பது வயது பெண்ணும் 75 வயது நபரும் அடங்குவர் என்று காவல்துறை தெரிவித்தது. ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும் இதர இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சந்தேக நபர் இன்னும் சிக்கவில்லை என்றும் சந்தேக நபர் கிளர்ச்சிப் படை ஒன்றுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது என்றும் அந்த அதிகாரி சொன்னார்.
தாய்லாந்தின் தென் மாநிலங்களான நராத்திவாட், பட்டானி, யாலா ஆகியவற்றில் அடிக்கடி வன்முறை வெடிப்பதுண்டு. 2004ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுவிட்டனர்.