தாய்லாந்து திருவிழாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூவர் பலி ; இருவரை கைது செய்த பொலிஸார்
மியன்மாருக்கு அருகில் உள்ள தாய்லாந்து நாட்டுப் பகுதியில் விழா ஒன்றில் குண்டுவெடித்தது தொடர்பாக தாய்லாந்து இருவரைக் கைது செய்துள்ளது.
அந்த குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்ததாக அந்நாட்டு காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 14) கூறியது.
தாய்லாந்தின் உம்பாங் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) நடைபெற்ற விழாவில் அங்குள்ள நடன மேடை ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக காவல்துறை கூறியது.
இதில் இருவர் உடனடியாக உயிரிழந்தனர் என்றும் மேலும் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விழாவில் ஏறத்தாழ 8,000லிருந்து 9,000 பேர் கூடியிருந்த நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவத்தில் கூடுதலாக 48 பேர் காயமடைந்ததாக காவல் துறை சொல்கிறது.
இதன் தொடர்பில் தாய்லாந்து காவல்துறையினர் அந்நாட்டு இளையர் ஒருவரையும் மியன்மாரின் கேரன் போராளி அமைப்பைச் சேர்ந்த ஒருவரையும் தாங்கள் கைது செய்துள்ளதாக விளக்கமளித்தனர்.
அந்த விழாவில் கேரன் போராளி தான் முன்னர் சண்டைபோட்ட குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒருவரை சந்தித்ததால் அவன்மீது வெடிகுண்டை வீசியெறிந்ததாக தாய்லாந்து காவல்துறை தலைவர் மேஜர்-ஜெனரல் சம்ரிட் எக்கமோல் கூறினார்.