பொலிஸ் மா அதிபருக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு?
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது பதவிக்காலம் நாளையுடன் (26) முடிவடைகிறது.
எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் மாதம் 26ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக தற்போதைய பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சிரேஷ்ட அதிகாரிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதிகாரிகள் நியமனம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தில், அடிப்படை உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு கடுமையான கவனம் செலுத்தப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான நியமனம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன பொலிஸ் திணைக்களத்தின் மூப்புப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
எனினும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
மேலும், நிலந்த ஜயர்தனவுக்கு எதிராக உள்ளக ஒழுக்காற்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தலலித் பதிநாயக்க மற்றும் தேஸ்பந்து தென்னகோன் ஆகியோர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.