பெரும் கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூவர் கைது
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டை உடைத்து சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிச் சென்ற மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ‘கபரா சுரேஷ்’ என்ற நபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் காணப்பட்ட கிட்டத்தட்ட 06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களில் பிட்டகோட்டே பபா என்ற பெண்ணும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு தங்க நெக்லஸ்கள், இரண்டு மோதிரங்கள், இரண்டு பென்டன்ட்கள் மற்றும் உருகிய 22 கரட் தங்க கட்டி, 18 கரட் மற்றும் 15 கிராம் தங்க கட்டிகள், 1750 பவுன் ஸ்ரேலிங் நோட்டுகள், 100 டொலர் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கிருலப்பனை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த கபர சுரேஷ் என்ற நபர் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி பிணையில் வெளிவந்து டிசம்பர் 10ஆம் திகதி கோடீஸ்வரனின் வீட்டுக்குள்அத்துமீறி நுழைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 15ஆம் திகதி, ஹெரோயின் போதைப்பொருளுடன் வத்தளை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், போலியான பெயர் சூட்டப்பட்டமையினால், முன்னைய குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.