தென் கொரியாவில் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூவர் படுகாயம்

தென்கொரிய உயர்நிலைப் பள்ளி ஒன்றில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை மாணவர் ஒருவர் மூவரைக் கத்தியால் குத்தியதாகவும் வேறு இருவரை அவர் காயப்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் சியோங்ஜு நகரில் உள்ளூர் நேரப்படி காலை 8.36 மணியளவில் நிகழ்ந்ததாகக் காவல்துறை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது. அந்நகரம், தலைநகர் சோலுக்கு 110 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே உள்ளது.
மாணவர், வகுப்பறையில் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது என்று சுங்புக் மாநில காவல்துறை அமைப்பு, செய்தியாளர்களுக்கு அறிக்கை அனுப்பி தெரிவித்தது.
இத்தாக்குதலில் முவர் மோசமான காயங்களுக்கு ஆளாயினர். அவர்களில் வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்துக் காயத்துக்கு ஆளான பள்ளி முதல்வரும் நெஞ்சில் கத்திக்குத்துக் காயத்துக்கு ஆளான அரசாங்க ஊழியரும் அடங்குவர்.
வேறு இருவர் இலேசான காயங்களுக்கு ஆளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதலை நடத்திய மாணவர் பள்ளிக்கு அருகிலிருக்கும் பூங்காவில் உள்ள ஏரிக்குள் குதித்துத் தப்பியோட முயன்றார். ஆனால், 12 நிமிடங்களுக்குள் அவர் பிடிபபட்டதாக சியோங்ஜு காவல்துறை தெரிவித்தது.