லண்டனை உலுக்கிய மூன்று கொடூர சம்பவம்; பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
லண்டனில் முடிசூட்டு விழா கொண்டாட்டங்கள் களைகட்டிவரும் நிலையில், கிழக்கு லண்டன் தெருக்களில் வெறும் எட்டு மணி நேரத்தில் மூன்று பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், ஆண்கள் இருவர் கத்திக்குத்துக்கு பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவங்கள் வெள்ளிக்கிழமை (மே 5) மற்றும் சனிக்கிழமை (மே 6) நடந்துள்ளன.
மாநகர பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை ஹாக்னியில் உள்ள குடியிருப்பில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் இரவு 11 மணியளவில் பொலிஸாரால் அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவவும் கோர்க்கை விடுக்கப்பட்டுள்ளது.அதே நாளில் பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய 16 வயது மாணவர் கொல்லப்பட்டடுள்ளார். கிழக்கு லண்டனில் மார்க்ஹவுஸ் சாலை பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மாணவன் பரிதாபமாக பலியானதாக கூறுகின்றனர். இந்த நிலையில் மூன்றாவதாக ஒருவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் பொலிஸார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
டாகன்ஹாமில் பார்ஸ்லோஸ் அவென்யூ பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.