இந்தியாவில் காப்புறுதிப் பணம் பெற கொலை செய்து ஆள்மாறாட்டம் செய்த மூவர் – இருவர் கைது
கடனில் சிக்கித் தவித்த ஒருவர் காப்புறுதி நிறுவனத்தை நூதன முறையில் ஏமாற்றிப் பணம் பெறுவதற்காக கொலை செய்து மாட்டிக்கொண்டார்.ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திர சிங் ராவத் என்பவர் மற்ற இருவருடன் சேர்ந்து அந்த செயலில் ஈடுபட்டதைக் காவல்துறை கண்டுபிடித்தது.
கோட்டா என்னும் பகுதியைச் சேர்ந்த துஃபான் சிங் பைரவா என்பவர் துப்புரவு வேலைகளைச் செய்ததுடன் அன்றாடச் செலவுக்குப் பணப் பற்றாக்குறை இருந்ததால் ஆங்காங்கே பிச்சை எடுத்து வீதியில் பிழைப்பு நடத்தி வந்தார்.அவரைக் கண்ட நரேந்திர சிங், பைருல், இப்ராஹிம் ஆகிய மூவரும் சதித் திட்டம் ஒன்றைத் தீட்டினர்.
சென்ற (நவம்பர்) மாதம் 30ஆம் திகதி, துஃபான் சிங்கை அணுகி, குஜராத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவரை அம்மூவரும் கூட்டிச் சென்றனர்.பின்னர், அளவுக்கதிகமாக அவருக்கு மது வாங்கிக் கொடுத்தனர். மதுபோதை உச்சத்திற்கு ஏறிய நிலையில் துஃபான் சிங் மயங்கி விழுந்தார்.
உடனே அவரைத் தூக்கிச் சென்று விரைவுச் சாலையில் போட்டனர். பின்னர் சிமெண்ட் ஏற்றிய லாரியை அவர் மீது ஏற்றினார் இப்ராஹிம்.அந்த இடத்திலேயே துஃபான் சிங் உயிரிழந்தார். அவரது சடலத்தின் அருகே நரேந்திர சிங் தனது சொந்த அடையாளப் பத்திரங்களைப் போட்டார். இறந்தது நரேந்திர சிங் என்று காவல்துறையை நம்ப வைத்து தனது பெயரில் காப்புறுதி செய்யப்பட்டிருந்த பெருந்தொகையை முழுமையாகப் பெறுவது அவரது திட்டம்.
அடையாளப் பத்திரங்களின் அடிப்படையில், நரேந்திர சிங்கின் குடும்பத்துடன் தொடர்புகொண்ட காவல்துறை, உயிரிழந்தவரை அடையாளம் காட்ட அழைத்தது.பதற்றத்துடன் வந்த அவரது குடும்பத்தினர், சடலத்தின் முகத்தைப் பார்த்தும் அது நரேந்திர சிங் இல்லை என்று கூறினர். சந்தேகம் அடைந்த காவல்துறை, முதலில் பைருலையும் பின்னர் இப்ராஹிமையும் கைது செய்தது.
நடந்தவற்றை அவ்விருவரும் வாக்குமூலமாக அளித்தனர். வேலை முடிந்ததும் பைருலுக்கு ரூ.85,000, இப்ராஹிமுக்கு ரூ.65,000 தருவதாக நரேந்திர சிங் உறுதி அளித்திருந்ததாக அவர்கள் கூறினர்.தப்பி ஓடிய நரேந்திர சிங்கை காவல்துறை தேடுகிறது