கட்டுநாயக்கவில் 13 கோடி ரூபா போதைப்பொருளுடன் மூவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) மற்றும் ‘ஹஷிஷ்’ (Hashish) போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் ‘சலாம் எயார்’ (Salam Air) நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகளையே இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதன்போது:
10 பார்சல்களில் இருந்த 10 கிலோ 394 கிராம் “குஷ்” போதைப்பொருள்.
18 பார்சல்களில் இருந்த 01 கிலோ 912 கிராம் “ஹஷீஷ்” போதைப்பொருள். ஆகியன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் மற்றும் கட்டிடத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





