இலங்கையில் அச்சுறுத்தும் சீரற்ற காலநிலை – மூவர் மரணம் – லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது தவிர கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 1,34,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், கண்டி, பொலன்னறுவை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மோசமான வானிலையை கருத்தில் கொண்டு, நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்கால அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியான வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், ஹிகுராக்கொட மற்றும் பலாலி விமானப்படை தளங்களில் பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இது தவிர, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளுக்காக ராணுவக் குழுக்களும் கடற்படை படகுகளும் அனுப்பப்பட்டுள்ளன.