இலங்கையில் அச்சுறுத்தும் காய்ச்சல் – 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்
இலங்கையில் தற்போது பெய்து வரும் கனமழைக் காரணமாக டெங்கு, எலிக் காய்ச்சலுடன் இன்ப்ளூயன்ஸா காய்ச்சலும் பரவி வருகிறது.
இதனால் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என குழந்தை நல மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே வலியுறுத்தியுள்ளார்.
“குளிர் காலநிலை காரணமாக இன்ப்ளூயன்ஸாவின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். இது நிமோனியாவாக மாறுவதற்கான அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
சிறுவர்கள் இந்த குளிர் காலத்தை எதிர்கொள்ளும் வகையில், அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க பெற்றோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குளிர்ந்த உணவுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதனை தவிர்க்க வேண்டும். மழையில் விளையாட அனுமதிக்கக் கூடாது.
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்று, கட்டாயம் படுக்கையில் ஓய்வெடுப்பது மிகவும் முக்கியம். அத்துடன், டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என குழந்தை நல மருத்துவர் ஹெரிஸ் பத்திரகே மேலும் தெரிவித்துள்ளார்.





