UKவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : தலைமறைவான வெளிநாட்டு குற்றவாளிகள்!
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுமார் 53000 இற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவுக்கு ( Rupert Lowe) கசிந்ததாகக் கூறப்படும் அரசாங்க ஆவணங்களில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆவணத்தில் 53,298 புலம்பெயர்ந்தோர் ஜாமீனை மீறியதாகவோ அல்லது தடுப்புக்காவலில் இருந்து தப்பித்ததாகவோ கூறப்பட்டுள்ளது. மேலும் 736 வெளிநாட்டு குற்றவாளிகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரூபர்ட் லோ, 53,298 சட்டவிரோத குடியேறிகள் தப்பியோடிவிட்டதாகவும், 736 வெளிநாட்டு குற்றவாளிகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது ஒரு தேசிய பாதுகாப்பு அவசரநிலை.
அவர்களை கண்டுப்பிடிக்க 65 ஊழியர்கள் உள்ளனர். இதற்கு ஆயிரக்கணக்கானோர் தேவை. ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியவரையும் சுற்றி வளைத்து நம் நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கசிந்த ஆவணங்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த உள்துறை அலுவலகம் மறுத்துள்ளது. ஆனால் அவை 2016 இல் கசிந்த தரவுகளைப் போலவே இருப்பதாக தி சன் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





