டிரம்பினால் உத்தரவால் அமெரிக்காவில் வீடற்று வாழும் பல்லாயிரம் மக்கள் – பசியாற்றும் இந்திய பெண்

அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் மற்றும் சமூக பதற்றம் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சுமார் 2,000 தேசியப் படை வீரர்களை வாஷிங்டன் நகரில் குவிக்க உத்தரவிட்டது.
எனஜனும், குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்து, சுற்றுலாத் தளங்களான மால்களில் கூடுதலான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதற்காக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த பதற்ற சூழலுக்கு மத்தியில், வர்ஜீனியாவில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணான நூபுர் பஞ்சாபி, தன்னுடைய சமூக சமையலறை அன்னசுதா மூலம் பல்லாயிரக்கணக்கான வீடற்றவர்களுக்கு தினசரி உணவு அளித்து வருகிறார்.
வெற்றிகரமாக இயங்கி வந்த தனது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை விட்டு, சமூக சேவையை வாழ்வாகக் கொண்டாடும் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
‘அன்னசுதா’ என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். ‘உணவும் அன்பின் அமிர்தமும்’ என்ற பொருளை தரும் இந்தச் சமூக சமையலறை, 300 தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மாதம் சுமார் 6,500 பேருக்கு உணவு வழங்கி வருகிறது. சிக்கன் பாஸ்தா, பட்டர் சிக்கன், சமோசா போன்ற இந்திய மற்றும் அமெரிக்க உணவுகள் இதன் மெனுவில் இடம் பெறுகின்றன.
தாயை இழந்ததையடுத்து கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சலே இந்தச் சமூக சேவையைத் தொடங்கக் காரணமாக அமைந்ததென நூபுர் கூறுகிறார். “நான் கோடீஸ்வரர் இல்லை, ஆனால் இந்தப் பணியில் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை” என அவர் உணர்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
ஒருபுறம் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் தன்னார்வலர்கள் பசியால் வாடும் மக்களுக்கு அன்போடு உணவளிக்கிறார்கள். நூபுரின் செயல், நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் இன்னும் ஒருமுறை நமக்குத் தூண்டுகிறது.