பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்காக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் நகரில் போராட்டம்
காஸாவில் ஹமாஸ் படையினரிடம் 14 மாதங்களுக்கு மேலாக பிணைக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சனிக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணி இஸ்ரேலிய நடிகர் லியோர் அஷ்கெனாசியும் கலந்துகொண்டார்.
“நாம் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொண்டு, பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
தமது இரண்டு மகன்களும் இன்னும் பிணைக் கைதிகளாக காஸாவில் உள்ளதாக ஜிக் ஹார்ன் என்னும் நபர் வருந்தினார் .போரை நிறுத்துங்கள். சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது, அனைவரையும் வீட்டிற்கு கொண்டுவர வேண்டும், என்று அவர் கூறினார்.
கடந்த சில நாள்களாக இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் பிணைக் கைதிகள் பலர் விடுவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தையை வழிநடத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கும் கத்தாரும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தினர். அப்போது 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
பிணைக் கைதிகளில் 117 பேர் விடுவிக்கப்பட்டனர். 62 பேர் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்தனர்.