‘சீனாவிலிருந்து தைவானைப் பிரிக்க நினைப்போர் அழிக்கப்படுவர்’ – சீன பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
சீனாவிலிருந்து தைவானைப் பிரிக்க நினைப்போர் துண்டு துண்டாக நசுக்கப்பட்டு அழிக்கப்படுவர் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரின் முன்னிலையில் அவ்வாறு கூறினார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தைவானின் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அதன் ஆளும் கட்சியான ஜனநாயக மக்கள் கட்சி, தைவான் நீரிணையில் காணப்படும் பதற்றநிலைக்குக் காரணம் என்று அட்மிரல் டோங் சாடினார். அதேபோல் தென்சீனக் கடல் பிரச்சினைக்கு பிலிப்பீன்ஸ்தான் காரணம் என்று அவர் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.அட்மிரல் டோங் பிலிப்பீன்சின் பெயரைக் குறிப்பிடவில்லை ஆனால் சக்திவாய்ந்த மற்ற நாடுகள் தரும் தைரியத்தில் இயங்கும் ஒரு நாடு என்று மட்டும் சுட்டினார்.
அந்த வகையில் இந்த வட்டாரத்தில் இல்லாமலேயே பதற்றநிலையை அதிகரிக்கும் தரப்புகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா மீதும் பெயர் வெளியிடாமல் குற்றஞ்சாட்டினார்.
“சீன தேசத்துக்கும் அதன் முன்னோர்களுக்கும் தாங்கள் இழைக்கும் துரோகத்துதை எடுத்துக்காட்டும் வகையில் தங்களின் சுயக் கொள்கைவாதக் கருத்துகளை அந்தப் பிரிவினைவாதிகள் அண்மையில் வெளியிட்டனர். அவர்கள் அவமானத்துக்கு ஆளானோராக வரலாற்றில் இடம்பெறுவர்,” என்று அட்மிரல் டோங் சொன்னார். புதிய தைவானிய அதிபராக லாய் சிங் டெ மே மாதம் 20ஆம் திகதியன்று பதவியேற்றபோது ஆற்றிய உரையைக் குறிவைத்து அட்மிரல் டோங் பேசினார்.
லாய், சீனாவை ‘பெய்ஜிங் அதிகாரிகள்’ என்றோ ‘நீரிணைக்கு அந்தப் புறம் இருப்பவர்கள்’ என்றோ அடையாளம் காணாமல் சீனா என்று நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசினார். அது, சீனா, தைவான் இரண்டும் தனி நாடுகள் என்பதைச் சித்திரிக்கும் கருத்து என்று நம்பப்படுகிறது.
லாய் உரையாற்றி மூன்று நாள்களுக்குப் பிறகு சீனா, தைவானுக்கு அருகே ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. ‘பிரிவினைவாதிகளும்’ வெளிநாட்டுத் தரப்புகளாலும் சீனா, அமைதியான முறையில் தைவானுடன் மீண்டும் ஒன்றுசேர்வதற்கான வாய்ப்புகள் அழிந்துபோவதாக அட்மிரல் டோங் சாடினார்.