ஞாபக மறதி இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள்!
நினைவாற்றல் இழப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு நிலைதான் ஞாபக மறதி. இது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது.
இருப்பினும் சில வழிமுறைகளைப் பின்பற்றி நினைவக செயல்பாட்டை நாம் அதிகரிப்பதால், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். இந்தப் பதிவில் ஞாபக மறதி பிரச்சினை இருப்பவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக கடத்த பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் என்னவெனப் பார்க்கலாம்.
தினசரி ஒரே மாதிரியான வழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்: ஞாபகம் மறதி பாதிப்பு உள்ளவர்கள் தினசரி ஒரே மாதிரியான வழக்கத்தை உருவாக்கிக் கொள்வதால், அவர்களின் நினைவாற்றலை ஒருங்கிணைக்க உதவுகிறது. வழக்கமான உணவு நேரங்கள், உடற்பயிற்சிகள், அறிவாற்றல் பயிற்சிகள் மற்றும் ஓய்வு நேரங்கள் உள்ளடக்கிய தினசரி அட்டவணையை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, கஜினி சூர்யா போல அனைத்தையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மறதியால் ஏற்படும் குழப்பத்தைக் குறைக்க உதவும்.
நினைவகத்திற்கு உதவும் பொருட்களை பயன்படுத்துங்கள்: முக்கியமான தேதிகள், சந்திப்புகள் மற்றும் உங்கள் வேலைகளை நினைவில் வைத்துக் கொள்ள கேலண்டர்கள், நினைவுபடுத்தும் செயலிகள் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே குறிப்பெடுத்துக் கொள்வதால், பிறரை நம்பி உங்கள் வாழ்க்கையை வாழ்வது குறைகிறது.
அறிவாற்றல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்: வழக்கமான அறிவாற்றல் பயிற்சிகள் மூளையின் செயல்பாட்டை தூண்டி, நினைவகத்தை மேம்படுத்த உதவும். புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள், வாசிப்பு மற்றும் நினைவாற்றல் பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதால் உங்களது கவனம் மேம்படுகிறது. மேலும் இதன் மூலமாக புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாவதால், காலப்போக்கில் நினைவாற்றல் செயல்பாடு அதிகரிக்கும்.
ஆதரவு தரும் கூட்டத்தில் இருங்கள்: மறதி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு வலுவான ஆதரவு தரும் கூட்டம் இருப்பது முக்கியமானது. உதவி மற்றும் ஊக்கத்தை வழங்கக்கூடிய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆதரவை நாடுங்கள். இதன் மூலமாக உங்களது தனிமை உணர்வு நீங்கி மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
சுய கவனிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: மறதி பாதிப்பு உள்ளவர்கள் சுய கவனிப்பு மற்றும் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். உடற்பயிற்சி, தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். நன்றாகத் தூங்கி எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களித்து, மன அழுத்தத்தை குறைப்பதால், உடலையும் மனதையும் மேம்படுத்தி நினைவக செயல்பாட்டை சிறப்பாக மாற்றலாம்.