இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி!

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதை அடக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் நடந்துள்ளன. இது பொதுமக்களின் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இல்லை.
ஆனால் இந்த பாதாள உலகக் குழுக்கள் நீண்ட காலமாக வளர்ந்த பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பரவியுள்ளன.
எனவே, அவர்களின் உறவுகள் ஒரு அழிவுகரமான வலையமைப்பாக வளர்ந்துள்ளன. அவற்றை அடக்குவதற்கு நாங்கள் வலுவான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இந்த வேலையை எங்களால் செய்ய முடியும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இவை அரசியல் பாதுகாப்பின் கீழ் வளர்ந்தன. இப்போது எந்த அரசியல் பாதுகாப்பும் இல்லை. மறுபுறம், எங்களுக்கு சில தகவல்கள் கிடைக்கின்றன, அது குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம்.
இவை வேறொரு குழுவுடன் மோதும் பாதாள உலகக் குழுக்களா அல்லது இதற்குப் பின்னால் யாரோ ஒருங்கிணைத்து இயக்குகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. அது குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.