இலங்கையில் பிராந்திய ராஜ்ஜியம் கிடையாது!
இலங்கையில் எந்த இடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஒருசிலர் தமக்கு தமக்கு பிராந்திய ராஜ்ஜியம் இருப்பதாக நினைத்து , தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்படுகின்றனர்.
இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“ தொல்பொருள் திணைக்களத்தால் வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருள் பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்த பெயர் பலகைகள் ஒருசில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் , குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வடக்கு , கிழக்கு , மேற்கு மற்றும் தெற்கு என்று மாகாண அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது.
தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை அகற்றி இனவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் .
இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கூறினார்.





