ஐரோப்பிய வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூடு – கவலையில் செக் குடியரசு ஜனாதிபதி
செக் குடியரசில் உள்ள சார்ல்ஸ் பல்கலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 14 பேருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அதற்கமைய நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று நாடு அறிவித்துள்ளது.
அதில் 25 பேர் காயமுற்றனர். துப்பாக்கிச் சூடு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் செக் ஜனாதிபதி பெட்டர் பாவெல் கூறினார்.
தேவையில்லாமல் அப்பாவி உயிர்கள் பலியானதாக அவர் கூறினார்.
இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பல்கலையில் பயிலும் 24 வயது மாணவர் என்றும் அவர் மீது பழைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த மாணவர் ஏற்கெனவே அவரின் தந்தையைக் கொலை செய்ததாகவும் முந்தைய வாரம் ஏற்பட்ட 2 மரணங்களுக்கு அவர் காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பல்கலையின் நடைபாதைகள், வகுப்பறைகள் ஆகியவற்றில் மாணவர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். மாணவர்களும் பல்கலை ஊழியர்களும் அறைகலன்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சிலர் தங்களைத் தற்காத்துக்கொள்ள மாடியில் இருந்து கீழே குதிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. ஐரோப்பிய வரலாற்றில் பதிவான மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இது என்றும் கூறப்படுகின்றது.