2025 இல் மாத்திரம் 66 சதவீதம் உயர்ந்த தங்கத்தின் பெறுமதி : வெள்ளியும் வரலாறு காணாத அளவு உயர்வு!
சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.8% உயர்ந்து $4,364.70 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க தங்க எதிர்காலம் 1% உயர்ந்து $4,386.30 என்ற அளவில் நிலைப்பெற்று வருகிறது. இது வரும் ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்றம் காணும் என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கம், 2025 ஆம் ஆண்டில் 66% உயர்ந்துள்ளது. இது 1979 க்குப் பிறகு பதிவான செங்குத்தான ஏற்றம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வலுவான மத்திய வங்கி கொள்முதல்கள் மற்றும் தங்க ஆதரவு ETF களில் பாரிய அளவு தாக்கம் செலுத்தியமை ஆகிய காரணிகள் இந்த ஏற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்கிடையே தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் பெறுமதியும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 7.3% உயர்ந்து $77.48 ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு வெள்ளி 168% உயர்ந்துள்ளது.
இது அமெரிக்காவின் முக்கியமான கனிமப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாலும், விநியோகப் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்களின் விருப்பத்தாலும் உந்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிளாட்டினம் அவுன்ஸ் ஒன்றுக்கு 5.1% உயர்ந்து $2,216.45 ஆக பதிவாகியுள்ளது. கடந்த திங்கட் கிழமை $2,478.50 என்ற சாதனை உச்சத்தையும் எட்டியதும் குறிப்பிடத்தக்கது.





