அமெரிக்கா மீண்டும் முகமூடி அணிவது கட்டாயமாக்கியுள்ளது
வட அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகமூடி அணியுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கனடாவில் பரவி வரும் காட்டுத்தீயால் அமெரிக்காவின் பல பகுதிகளில் அடர்ந்த புகை பரவி வருவதே இதற்கு காரணம்.
தற்போதைய நிலவரப்படி, வட அமெரிக்க குடியிருப்பாளர்கள் N95 முகமூடிகளை அணியுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புகைமூட்டம் காரணமாக, அமெரிக்காவின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.
நியூயார்க் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று, உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக நியூயார்க் நகரம் உருவெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக, இந்தியாவின் புது டெல்லி மற்றும் ஈராக்கின் பாக்தாத் நகரங்களை விட நியூயார்க்கின் காற்றின் தரம் மிகவும் குறைவாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதுள்ள சுகாதார அபாயத்தைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் நியூயார்க்கர்களுக்கு இலவசமாக முகமூடிகளை விநியோகிக்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கனேடிய சுகாதாரத் துறைகளும் நாட்டில் உள்ள மக்களுக்கு வீட்டில் இருக்க முடியாவிட்டால் முகமூடிகளை அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளன.
கனடா மற்றும் அமெரிக்காவில் மோசமான காற்றின் தரம் வார இறுதியில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலான புகை கனடாவின் கியூபெக்கில் இருந்து வருகிறது. 150 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரொறன்ரோ நகரமும் புகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.