இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு
ஜனாதிபதி அல்லது தற்போதைய அரசாங்கம் இதுவரை வெளியிடாத ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு விடுத்த கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தற்போது பகிரங்கப்படுத்தப்படாத இரண்டு ஜனாதிபதி விசாரணைக் குழு அறிக்கைகள் தன்னிடம் உள்ளதாகவும், அவற்றை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதி பகிரங்கப்படுத்தாவிட்டால், அந்த அறிக்கைகளை 7 நாட்களுக்குள் தாம் பகிரங்கப்படுத்துவேன் எனக் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்துக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகள் பேசுபொருளாக மாறியது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரிடம் உள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் இருப்பது தொடர்பில், விசாரணை நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அந்த கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை இதுவரை ஜனாதிபதியோ அல்லது தற்போதைய அரசாங்கமோ வெளியிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு தாம் அரசாங்கத்திற்கு விடுத்த கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைவதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.