தோனிக்கு பிறகு சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தொடர்பில் அணி நிர்வாகம் எடுத்த முடிவு!
கடந்த வாரம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது. ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறி உள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி அவரை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவருக்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களாக உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் பல இளம் வீரர்களை எடுத்துள்ளனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் எடுத்துள்ளனர். சென்னை அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை இருந்தது. தோனி வரும் சீசனில் விளையாடுவது உறுதி என்றாலும் எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் ஆக இருக்கும் ஒருவர் அணிக்கு தேவைப்பட்டார்.
இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கேஎல் ராகுல், ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், ரிஷப் பந்த் போன்ற முக்கிய வீரர்கள் இருந்தபோதிலும் சென்னை அணியால் அவர்களை வாங்க முடியவில்லை. தோனி கடந்த இரண்டு சீசன்களாகவே கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஐபிஎல் 2023ல் கோப்பையை வென்ற பிறகு தோனி ஓய்வையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த சீசனில் தனது கேப்டன்சியை ருதுராஜ் கைகுவாட்டிடம் கொடுத்துவிட்டு ஒரு வீரராக விளையாடினார். எனவே இந்த ஆண்டும் அதேபோல கடைசி இரண்டு ஓவர்களில் மட்டுமே தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனிக்கு பிறகு யார்?
இந்நிலையில் தோனிக்கு பிறகு ஒரு நிரந்தர விக்கெட் கீப்பராக யாரை நியமிக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பர்களாக தோனி மற்றும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே மட்டுமே உள்ளனர். கேப்டன் ருதுராஜ் ஒரு சில உள்ளூர் தொடர்களில் மட்டும் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி இல்லாத பட்சத்தில் கான்வேயை கீப்பராக பயன்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஆர். அஷ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் குர்ரன், ஷேக் ரஷீத், அன்ஷுல் காம்போஜ், முகேஷ் சவுத்ரி ஹூடா, குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ண கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.