யாழில் பாடசாலை மாணவியுடன் ஆபாசமாக பேசிய ஆசிரியர் – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியான சிறுமியுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புறநகர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே, யாழ்ப்பாண பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
இன்று காலை 6 மணியளவில் ஆசிரியர் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.பெற்றோரின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய ஆசிரியர், மாணவிக்கு தொலைபேசியில் கணிதம் கற்பிக்கப் போவதாகவும் அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் குறிப்பிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
மாணவியிடம் தொலைபேசியை கொடுத்த பின்னர் அவுட் ஸ்பீக்கரை நிறுத்தும்படி கூறியதாகவும் பின்னர் மாணவியை சில பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும்படி அறிவுறுத்தல்கள் வழங்கியதாகவும் பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குறிப்பிட்ட ஆசிரியர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.விசாரணையின் பின்னரே முறைப்பாட்டின் உண்மைத்தன்மை தெரிய வருமென பொலிஸார் தெரிவித்தனர்.