“புலி வாலை பிடித்த கதை” – பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா வகுத்த புதிய திட்டம்!
ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனில் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான நோக்கத்துடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
பாரிஸில் உக்ரைனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மேற்படி பிரகடனம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவவும், ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் அறிவித்துள்ளார்.
நட்பு நாடுகள் உக்ரைனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா தலைமை தாங்கும் என்றும் முன்மொழிந்துள்ளன.
உக்ரைனில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு துருப்புக்களும் “சட்டபூர்வமான இலக்காக” இருக்கும் என்று ரஷ்யா பலமுறை எச்சரித்துள்ள நிலையில் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஒப்பந்தம் தொடர்பில் ரஷ்யாவின் தரப்பில் இருந்து எவ்வித கருத்துக்களும் வெளியாவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





