அதிபர் யூன் சுக் இயோலைக் கட்சியிலிருந்து விலகச் சொன்ன ஆளுங்கட்சித் தலைவர்
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் கட்சியிலிருந்து விலகும்படி ஆளும் மக்கள் சக்திக் கட்சியின் தலைமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிபர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தும் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தைத் தடைசெய்ய உறுதிகூறியபோதும் யூனைக் கட்சியிலிருந்து விலகும்படி கேட்டுக்கொண்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஹான் டோங்-ஹூன் செய்தியாளர்களிடம் டிசம்பர் 5ஆம் திகதி கூறினார்.அரசியலமைப்புக்கு விரோதமான வகையில் அதிபர் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்ததைத் தமது கட்சி தற்காக்க முயலவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிபரின் அந்த அறிவிப்பு தொடர்பில் அவர் மீது அரசியல் குற்றம் சுமத்த எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் தீர்மானத்தைத் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு முறியடிப்பர் என்று அவர் உறுதிகூறினார்.
“கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 108 பேரும் ஒன்றுபட்டு, அதிபர் மீதான அரசியல் குற்றச்சாட்டை நிராகரிப்பர்,” என்று நேரலையில் ஒளிபரப்பப்பட்ட மக்கள் சக்திக் கட்சிச் சந்திப்பில் கட்சியின் தலைவர் சூ கியுங்-ஹோ கூறினார்.
அதிபர் மீதான அரசியல் குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நிறைவேற்ற, ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரித்து வாக்களித்தால் போதும்.
உள்ளூர் நேரப்படி டிசம்பர் 7ஆம் திகதி இரவு 7 மணிக்கு ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று சோசுன் இல்போ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நிறைவேறினால், யூன் அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
அரசியலமைப்பு நீதிமன்றம் அதன் தொடர்பில் தீர்ப்பளிக்கும். அவர் குற்றவாளி என்று நீதிபதிகள் தீர்ப்புக் கூறினால் பதவி நீக்கம் செய்யப்படுவார். அடுத்த 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.