ஐரோப்பாவை அச்சுறுத்தும் போர் அபாயம் – ஜெர்மனி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

ஜெர்மனியில் போர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயநிலைமை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
35 வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்பு போன்று இல்லாதபோதும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்களின் பின்னணியில், இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போருக்கு தயாராக இருக்க வேண்டும். வீடுகளில் 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என
சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தின் தலைவர் ரால்ப் டைஸ்லர் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, இந்த புதிய வழிகாட்டியில் போர், சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் உத்திகள் மற்றும் நாசகாரவேலை போன்ற அச்சுறுத்தல் இணைக்கப்பட்டுள்ளன.
போர் ஒன்று ஏற்பட்டால், வெடிப்புகள் அல்லது தாக்குதல்களின் போது தவறான தகவல்களை அங்கீகரிப்பது மற்றும் தங்குமிடம் தேடுவது பற்றிய ஆலோசனைகளும் வழிகாட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை. ஜெர்மனியில் அவசர நிலைமை ஒன்று ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் 53 வீதமான மக்கள் தயார் நிலையில் இல்லை என, சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.